கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது நாள் தியானத்தை தொடங்கி செய்து வருகிறார்.
2024 மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு, எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி இன்று தனது மூன்றாவது நாள் தியானத்தை நிறைவு செய்கிறார்.
’சூரிய அர்க்யா’
சுவாமி விவேகானந்தர் ஞானம் பெறுவதற்கு முன்பு, தியானம் செய்த விவேகானந்தர் பாறையில் சூரிய உதயத்தின்போது, ‘’சூரிய அர்க்யா’’ செய்த பின்னர் பிரதமர் மோடி தனது மூன்றாவது நாள் தியானத்தை இன்று(ஜூன் 1) காலையில் தொடங்கினார்.
சூரியனின் வடிவில் வெளிப்படும் கடவுளுக்கு வணக்கம் செலுத்துவதை உள்ளடக்கிய ஆன்மீகப் பயிற்சி தான் ‘சூரிய அர்க்யா’ என்ற சடங்கு. அதை பிரதமர் மோடி இன்று காலையில் விவேகானந்தர் பாறையில் செய்தார்.
பிரதமர் மோடி ஒரு பாரம்பரிய சிறிய பாத்திரத்திலிருந்து சிறிதளவு நீரைக் கடலில் காணிக்கையாக (அர்க்யா) ஊற்றி, தனது பிரார்த்தனை மணிகளை (ஜப மாலை) பயன்படுத்தி, பிரார்த்தனை செய்தார். காவி உடை அணிந்திருந்த பிரதமர் மோடி, சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரதமர் தனது ‘ஜப மாலை’யுடன் மண்டபத்தைச் சுற்றி வந்தார். மூன்றாம் நாள் தியானம் சனிக்கிழமையான, இன்று மாலை முடிவடையும் நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர், பிரதமர் மோடி டெல்லி செல்கிறார்.
இந்தியாவின் கடைசி கோடி, கன்னியாகுமரி அதன் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிரபலமானது மற்றும் இந்த விவேகானந்தர் நினைவு மண்டபம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பாறையில் அமைந்துள்ளது. விவேகானந்தர் பாறை நினைவிடத்தில், பிரதமர் மே 30ஆம் தேதி(வியாழக்கிழமை) மாலை தியானத்தைத் தொடங்கினார். அதை அவர் இன்று மாலை முடிக்க உள்ளார்.
இந்து வேதங்களின்படி, பார்வதி தேவியும் சிவபெருமானுக்காக காத்திருந்தபோது ஒரு இடத்தில் ஒற்றைக் காலில் தியானம் செய்தார் என்று கூறப்படுகிறது.
கன்னியாகுமரி பயணம்
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூரில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி வியாழக்கிழமை கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். மூன்றாவது முறையாக பதவியேற்கும் நோக்கில், பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலுக்காக நாடு முழுவதும் விரிவாக பிரசாரம் செய்தார். அதற்கான முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு பின் அறிவிக்கப்படும்.
தேர்தல் காலத்தில், பிரதமர் மோடி 75 நாட்களில் பேரணிகள் மற்றும் ரோடு ஷோ உட்பட சுமார் 206 தேர்தல் பிரசார நிகழ்வுகளில் பங்கு எடுத்தார். பல்வேறு செய்தி மற்றும் ஊடக தளங்களில் சுமார் 80 நேர்காணல்களையும் அவர் செய்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி 2019 மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்ட பின், கேதார்நாத் சென்று பனிக்குகையில் அமர்ந்து தியானம் செய்தார். அப்போதும் துறவிபோல் ஒரு காவி உடை அணிந்திருந்தார். அது கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 755 அடி உயரம் கொண்டது. அந்த குகையில் பிரதமர் மோடி 17 மணி நேரம் தியானம் செய்தார். அந்த குகையின் பெயர், ‘ருத்ரா குகை’ என அழைக்கப்படுகிறது.