October 22, 2024
மன நலனில் அக்கறை தேவை!

மன நலனை மேம்படுத்தும் செயல்களை ஒருங்கிணைக்கும் உலக மன நல தினம் கடைபிடிக்கப்படுகிறது. மன நலம், மன ஆரோக்கியம் என்றதும் நம்மில் பலர் அதை வேறுவிதமான பார்வையில் பார்ப்பது வழக்கம். ஆனாலும், இதுகுறித்த பார்வையை நாம் விசாலப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பொருளாதாரப் பிரச்சினை, உறவுகளில் விரிசல், ஏமாற்றம், இயற்கை பேரழிவு, விபத்து, தீய பழக்கங்களுக்கு அடிமையாவது, உடல்நலக்குறை உள்ளிட்ட வாழ்க்கை பிரச்சினைகளால் பலர் மனநல பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து பேசினால் பலரிடம் இருந்து வரும் வார்த்தை, `இந்த உலகத்துல எனக்கு வந்தமாதிரி வேற யாருக்கும் பிரச்சினை வந்திருக்காது’ என்று சொல்வது வழக்கம். பிரச்சினைகள் என்பது ஆளாளுக்கு வேறுபடும் என்றாலும் அதிலிருந்து விடுபடுவது குறித்து சிந்திக்க வேண்டும்.

இன்றைக்கு உலக அளவில் ஏறக்குறைய 100 கோடி பேர் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சினைகளுக்காக 30 சதவீதத்திற்கும் குறைவானவர்கள்தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களில் பலர் தங்களது பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; இன்னும் சிலரோ இதுபோன்ற சிகிச்சைகள் எடுக்கும்போது தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும் என்று சிலர் பயமுறுத்துவதால் சிகிச்சை எடுக்க தயங்குகின்றனர். இப்படியான பல்வேறு காரணங்களால் மன நலன் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்காமல் தவிர்க்கின்றனர்.

மன நலனில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டியது அவசியம். இதற்கு சிகிச்சை மட்டுமே போதாது. இது உடல் நலக் குறைபாடு அல்ல; மனநலம் சார்ந்த பிரச்சினை என்பதை புரிந்துகொண்டு மனநலனுக்கான ஆலோசனை பெற வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பவர்களிடம், `சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை’ என்ற ஆதங்கம் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் அவர்கள் மனம் விட்டு பேச வைக்க வாய்ப்பு கொடுங்கள். இதுபோன்ற வழிமுறைகள்கூட மன நல பிரச்சினைகளில் இருந்து அவர்கள் விடுபட நல்வாய்ப்பாக இருக்கும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress