October 22, 2024
வறுமையின் நிறம்!

வறுமையின்
நிறம்
சிவப்பு..!
அது உண்மையே…
என் தந்தையின்
உயிரை
தினம் தினம்
குடிக்கிறது.

-இதுபோன்ற கவிதைகளை நாம் படித்துவிட்டு கடந்து போயிருக்கலாம். ஆனால், அந்த கவிதையின் உள்ளே பொதிந்திருக்கும் உண்மை என்னவென்றால் வியர்வை சிந்தி மட்டுமல்ல ரத்தம் வறண்டு போகுமளவு ஒரு தொழிலாளி உழைத்தால்தான் அவருக்கு வருமானம் கிடைக்கும். உழைப்பு என்பது வேறாக இருந்தாலும் சிலர் ரத்தம் வற்றிப்போகுமளவு உழைக்க வேண்டியிருக்கும். வறுமை காரணமாக சிலர் இதுபோன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்காக மட்டுமல்ல தனது குடும்பத்துக்காக உழைக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள்.

உழைப்பு… போதிய வேலைவாய்ப்பு கிடைக்காத மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடும். அதற்கான காரணங்கள் பலவாக இருக்கும். சில நேரங்களில் போர் காரணமாகவும், வன்முறை, பயங்கரவாதம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று உள்பட பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு என்பது இல்லாமல்போகும். இன்றைக்கு நம் கண்ணெதிரே சில நாடுகளில் நடக்கும் நிலவரங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா பெருந்தொற்று காலங்களில் பலர் வேலையிழந்து மிகுந்த அவதிக்குள்ளானதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஐ.டி நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கியவர்கள் தவணைமுறையில் வீட்டு உபயோகப்பொருள்களை வாங்கிப்போட்ட சூழலில் வேலை இல்லாமல் போனது. அதனால் அவர்களால் தவணைத்தொகை கட்ட முடியாமல் கையில் இருந்ததை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் வீடுகளை விற்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பேர் தற்கொலை முடிவை தேடியதும் நடந்த உண்மையே. இப்படியாக பல்வேறு வழிகளில் வறுமை தனிப்பட்ட மனிதனை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதிக்கிறது.

குடியிருக்க வீடு இல்லாமல்போவது, சுகாதார வசதி கிடைக்காமல் போவது, குழந்தைகள் கல்வி பெற முடியாத நிலை, உயிர் வாழ தேவையான உணவு கிடைக்காமல் போவது என வறுமையின் படிநிலைகளை சொல்லிக்கொண்டே போகலாம். வேலைவாய்ப்பு இல்லாமல் போகும்பட்சத்தில் வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் சிக்கித் தவிக்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பசி, வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக 1987ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள மனித உரிமைகள் மற்றும் விடுதலைக்கான சதுக்கத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் ஓரணியில் திரண்டனர். அதன்படி ஆண்டுதோறும் அக்டோபர் 17ஆம் தேதி வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
வறுமையை நினைத்து பயந்துவிடாதே… திறமை இருக்கு மறந்துவிடாதே என்ற சினிமா பாடலில் உள்ள வரிகளை நினைத்துப் பார்த்தால் வறுமையில் இருந்து மீள முடியும். மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காமல் அடுத்தது என்ன என்று சிந்திக்க வேண்டும்.

எம்.மரிய பெல்சின்,
பத்திரிக்கையாளர், 9551486617

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress