October 22, 2024
சளி, சைனஸ் சரியாக எளிய வழி!

இது மழைக்காலம். இனி வரும் காலம் குளிர்ச்சியான சூழல் நிலவும் என்பதால் சளித்தொல்லை, ஆஸ்துமா, சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் உடல்நிலையை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவின்மூலம் இந்த பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். இத்தகைய பிரச்சினை உள்ளவர்கள் மட்டும் அடிப்படையில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, வெதுப்பான நீர் அருந்துவது நல்லது. குளியல் என்னும்போது நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றை கொதிக்க வைத்து குளிப்பது மிகவும் நல்லது.

மூக்கடைப்பு பிரச்சினை இருந்தால் அரை ஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து அதனுடன் கொஞ்சம் பச்சை கற்பூரம் சேர்த்து நசுக்கி ஒரு துணியில் கட்டி மூக்கால் சுவாசிக்கலாம். திருநீற்றுப்பச்சிலை என்று ஒரு மூலிகை உள்ளது. இதையும்கூட எடுத்து நசுக்கி மூக்கால் சுவாசிக்கலாம். அதுமட்டுமல்ல இதே திருநீற்றுப்பச்சிலை மூலிகையை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். வீட்டுத் தோட்டங்களில் இருக்கும் கற்பூரவள்ளி இலையை சட்னி செய்து சாப்பிடலாம். மாலை வேளைகளில் கற்பூரவள்ளி இலையில் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். கூடவே சுக்கு மல்லி காபி போட்டுக் குடிக்கலாம். மழை மற்றும் குளிர் காலத்தில் இந்த காம்பினேஷன் இதமாக இருக்கும்.

சளித்தொல்லை இருப்பவர்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன் பூண்டுப் பால் குடிக்கலாம். பூண்டுப் பால் எப்படி செய்ய வேண்டுமென்றால் 10 பல் பூண்டு உரித்தெடுத்து 50 மில்லி பால், அதே அளவு நீர் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்ததும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பனங்கற்கண்டு சேர்த்து நன்றாகக் கடைந்து குடித்து வந்தால் சளித்தொல்லை சரியாகும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளி கரைந்து மலத்துடன் வெளியேறும்.

மேலும் மழைக்காலத்தில்தான் ஆஸ்துமா பிரச்சினை வீறுகொண்டு எழும். அதனால் ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி, மிளகு, சீரகம் சேர்த்து ஒரு கசாயம் வைத்துக் குடிக்கலாம். ஆடாதோடை இலை கசாயமும் குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடையில் முருங்கை விதை கேட்டு வாங்கி அதை உடைத்து அதன் உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிட்டாலும் ஆஸ்துமா, நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும். மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகிறவர்கள் அவர்களது பிரச்சினைகளைப் பொறுத்து காலை, மதியம், மாலை, இரவு வேளைகளில் முருங்கை விதையைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress