October 22, 2024
ஃப்ரிட்ஜ்… சவப்பெட்டி அல்ல!

மனிதனை நோய்கள் பாதிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒழுங்கற்ற உணவுமுறை மட்டுமல்ல அன்றாடம் நாம் பத்திரப்படுத்தி வைக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு குளிர்சாதனப்பெட்டிகளில் (ஃப்ரிட்ஜ்) பல உணவுப்பொருள்களை அடைத்துவைக்கிறோம். அவைகூட உடல்நலனுக்கு ஊறுவிளைவிக்கக் காரணமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக நுரையீரல் சார்ந்த நோய்கள் மற்றும் புற்றுநோய் வருவதற்கு பாதுகாப்பற்ற முறையில் ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அடிப்படையில் ஃப்ரிட்ஜ் நல்லது இல்லை என்றாலும் பெரும்பாலான உணவுப்பொருள்களை பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில்தான் சேமித்து வைக்கிறோம்.

மெல்லக்கொல்லும் விஷம் என்பார்களே… அத்தகைய செயலை பிளாஸ்டிக் செய்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாங்க ஆர்கானிக்குக்கு மாறிட்டோம்... இயற்கை விளைபொருள்களைத்தான் சாப்பிடுறோம்’ என்று சொல்லும் பலரும் இதே தவறுகளை செய்கின்றனர்.சேமித்து வைப்பதற்கு இதுதான் வசதியாக இருக்கிறது’ என்று கூறிக்கொண்டு பலரும் இந்த தவறுகளை செய்து வருகின்றனர். கேடு என்று தெரிந்தும்கூட அது நம் கண்ணில் தெரிவதில்லை என்பதால் இந்த தவறுகளை செய்து வருகிறோம். ஆகவே இனி வரும் காலங்களில் சில உணவுப் பொருட்களை ப்ரிட்ஜில் வைக்காமல் இருப்பது நல்லது. உதாரணமாக வாழைப்பழத்தை அதிகப்படியான குளிர் மற்றும் இருள் சூழ்ந்த இடத்தில் வைத்திருந்தால் அதிலுள்ள சத்துகள் அழிவதுடன் அது அழுகிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே திறந்த வெளிகளில் வாழைப்பழத்தை வைத்திருப்பது நல்லது.

வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைப்பவர்களும் இருக்கிறார்கள். வெங்காயத்தை உலர்ந்த சூழலில் வைப்பதே நல்லது. உருளைக்கிழங்கு ஈரத்தில் முளைவிடக்கூடியது என்பதால் அதை சாதாரண தட்பவெப்பநிலையில் வைப்பது நல்லது. ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிலுள்ள ஈரப்பதத்தால் உருளைக்கிழங்கு சீக்கிரம் கெட்டுவிட வாய்ப்புள்ளது. இந்த உண்மை சிலருக்குத் தெரிந்தும்கூட தவறு செய்துகொண்டிருக்கின்றனர். தக்காளியையும்கூட ஃப்ரிட்ஜில் வைக்காமலிருப்பது நல்லது.

முட்டையை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா, கூடாதா என்ற விவாதம் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. மீன் மற்றும் இறைச்சிகளைப் போன்று முட்டைகளும் ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்கக்கூடியவை என்பதால் அதில் கவனம் தேவை. சுத்தமற்ற, சுகாதாரமற்ற நிலையில் சேமிக்கப்பட்டால் அதன்மூலம் தொற்றுகள் உருவாகவும், ஃபுட் பாய்சன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரெட் போன்ற பேக்கரி பொருட்களையும் ஃப்ரிட்ஜ் உள்ளே வைக்கக்கூடாது. சாதாரண தட்பவெப்பத்தில் அதை வைத்திருப்பது நல்லது. அதிகமான குளிரில் சுவை கெடுவதுடன் கெட்டியாகிவிடும். சில நேரங்களில் பூஞ்சை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் திறந்த வெளியில் வைப்பதே நல்லது.

தேனை சாதாரண தட்பவெப்பநிலையில் வைத்திருந்தாலே போதும். கெட்டுப்போய் விடும் என்று நினைத்துக்கொண்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் அது தன் நிலையை மாற்றிக்கொண்டு மணல்போன்று கடினமாகவும், சுவை மாறிப்போகவும் வாய்ப்புள்ளது. இன்னும் சொல்லப்போனால் உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் நிலை மாறிப்போகும். உணவுப்பொருள்கள் கெட்டுவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டு ஃப்ரிட்ஜின் உள்ளே வைப்பதால் அவை நம் உடல்நலத்துக்கு மட்டுமல்ல உயிருக்கே உலை வைக்க நேரும். அதனால்தான் சிலர் ஃப்ரிட்ஜை சவப்பெட்டி என்று சொல்கிறார்கள்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress