October 22, 2024
36 படகுகள் தயார்: இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?

வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டுள்ளது.

கனமழையை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறுகிறது தமிழக அரசு.

ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிதீவிர மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் எந்த தமிழக மாவட்டங்களும் இல்லை என்று கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் எந்த அளவுக்கு தயாராக உள்ளன?

வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?


இன்று காலை (அக்டோபர் 14) தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதி அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “இந்தகுறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 15 மற்றும் 16 தேதிகளில் புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திராவின் கடலோர பகுதிகளில் நிலை கொள்ளும்,” என்று தெரிவித்தார்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் அடுத்த சில நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் 16ஆம் தேதி அன்று சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்


14-ஆம் தேதி அன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் மற்றும் புதுவை – காரைக்கால் பகுதிகளில் கனமுதல் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

15-ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை ஓரு சில இடங்களில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16-ஆம் தேதி அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மற்றும் 16 தேதிகளில் சென்னைக்கு ஆரஞ்சு நிற அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி, மஞ்சள் நிற எச்சரிக்கை கனமழை காலங்களில் வழங்கப்படுகிறது. பொதுவாக 7 முதல் 11 செ.மீ மழை பொழிவு ஏற்பட இருக்கும் காலங்களில் இந்த எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

மிக கனமழை என்பது 12 முதல் 20 செ.மீ மழைப்பொழிவை குறிப்பதாகும். இத்தகைய சூழலில் ஆரஞ்சு அலர்ட் வழங்கப்படுகிறது.

அதீத கனமழை என்பது 20 செ.மீக்கும் மேலே மழைப்பொழிவு ஏற்படும் நிகழ்வாகும். அப்போது சிவப்பு நிற அலர்ட் வழங்கப்படுகிறது.

அதீத கனமழைக்கு வாய்ப்பு – ப்ரதீப் ஜான்


ஐந்து நாட்களுக்கான கணிப்பின் அடிப்படையில் 20 செ.மீக்கும் மேலே சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு வெதர்மென் என்று அறியப்படும், ப்ரதீப் ஜான் இது குறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், “மழை எப்போது ஆரம்பிக்கும் என்று உறுதியாக கூற இயலாது, ஆனால் இந்த நான்கு நாட்களில் ஏதாவது ஒரு நாள் நிச்சயமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டுவை உள்ளடக்கிய பகுதிகளில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக,” கூறியுள்ளார்.

இந்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்திற்கு அருகே மேற்கொண்டு நகராமல் நிலை கொண்டாலோ அல்லதுகுறைவான வேகத்தில் முன்னேறினாலோ நான்கு நாட்களுக்கும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்.13) நேரில் சென்று பார்வையிட்டார்.

மழைக் காலங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் மையமாக இந்த மையம் செயல்படும். சென்னையில் எந்தெந்த பகுதிகளில் வெள்ள நீர் தேங்குகிறது என்பதை நேரலையில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொள்ளும்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பொருட்டு 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்வெட்டு போன்ற நிகழ்வுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மின்சாரத்துறை ஊழியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

36 படகுகள் தயார் – சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மேயர் பிரியா, “தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள் மற்றும் வடிகால்களில் செல்லும் நீரின் அளவை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கே உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் அதனை நேரலையில் காண இயலும். நீர் தேங்கும் சூழல் ஏற்படும் போது அதனை உடனடியாக சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்று கூறினார்.

இதுமட்டுமின்றி, காலநிலையை கண்காணிக்கும் செயலி ஒன்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், அதன் மூலம் அவரவர் மண்டலங்களில் எந்தெந்த இடங்களில் மழையின் அளவு அதிகமாக உள்ளது, எங்கே நீர் தேங்கியுள்ளது என்பதை அதிகாரிகள் அறிந்து கொள்ள இயலும் என்று கூறினார்.

“கூடிய விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இது வழங்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னை மாநகராட்சி 36 படகுகளை வாங்கியுள்ளது. இது குறித்து பேசிய அவர், “இந்த படகுகளை தேவையான மண்டலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். குறிப்பாக வேளச்சேரி, மண்டலம் மூன்றில் உள்ள விநாயகபுரம் போன்ற பகுதிகளுக்கு நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். கூடுதல் தேவை ஏற்படும் பட்சத்தில் மீனவர்களிடம் 80 படகுகள் வாங்கப்படும்,” என்று கூறினார்.

நிவாரண மையங்கள் குறித்து பேசிய அவர், “169 வார்டுகளில் தற்போது நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒருங்கிணைந்த சமையலறையில் சமைத்த உணவுகளை மையங்களுக்கு கொண்டு செல்வது நேர விரயமாக இருப்பதால், அந்தந்த மையங்களிலேயே உணவுப் பொருட்களை சமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று கூறினார்.

சென்னை மக்களுக்கு கை கொடுக்குமா மழைநீர் வடிகால் திட்டம்?
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையின் போது நகரின் பெருவாரியான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கட்டி முடிக்கப்படாத வடிகால்கள் திறந்த நிலையில் அப்படியே விடப்பட்டிருந்தது சில இடங்களில் விபத்திற்கு வழிவகை செய்தது.

கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் திறந்து கிடந்த மழைநீர் வடிகாலால் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அசோக் நகரில் ஐயப்பன் என்பவர், அவ்வாறான மழைநீர் வடிகால் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி, பொதுமக்கள் இது தொடர்பாக ஏதேனும் பிரச்னை என்றால் மாநகராட்சிக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, “நெடுஞ்சாலைத்துறையும் சில பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மாநகராட்சியில் புதிய பணிகள் எதையும் 30-ஆம் தேதிக்கு மேல் துவங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக,” என்று கூறினார்.

பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress