October 15, 2024
வலிக்கு ஜில்ஜில் சிசிச்சை!ஐஸ் தெரபியின் நன்மைகள்

மருத்துவம் முன்னேறியிருக்கும் இந்த காலத்தில், அனைத்து நோய்களுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி என்ற பட்டியலில் தெரபி சிகிச்சைகளும் அடக்கம். வெளிநாடுகளில் தெரபி சிகிச்சைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த தெரபி சிகிச்சையிலும் பல வகைகள் இருக்கின்றன. அதில் ஒன்று ஐஸ் தெரபி. ஐஸ்கட்டிகளின் மூலம் அளிக்கப்படும் புதிய சிகிச்சைக்குத்தான் இந்தப் பெயர். வலியா, வீக்கமா… கவலை வேண்டாம். இந்த எளிமையான, குளுமையான சிகிச்சை மூலம் குணமடையலாம் என்கின்றனர், அதன் மருத்துவர்கள்.


இது, நம் அன்றாட வாழ்க்கையில் எளிதாகச் செய்யப்படுகிற சிகிச்சை முறையின் நவீன வடிவமே. இதனால் வலியும் வீக்கமும் குறையும். சிறிய அளவிலான வெட்டுக்காயங்களில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்தவும் ஐஸ் தெரபி உதவும். இது திசுக்களில் ஏற்படும் பிரச்னைகளை குறைத்து, காயங்களை எளிதில் ஆறவைக்கிறது. தசைகளில் ஏற்படும் சுளுக்கு, பிடிப்புகளை சரிசெய்யவும், கெட்டியாக இருக்கும் தசைகளை தளர்வாக்கி ரிலாக்ஸ் செய்யவும் உதவுகிறது. டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு குதிகால், தோள்பட்டை, முன் கைமூட்டுகளில் ஏற்படும் வலி, சுளுக்கு போன்றவற்றை உடனடியாக சரி செய்ய ஐஸ் தெரபிதான் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல், நடனக் கலைஞர்களுக்கும், சாகசம் செய்பவர்களுக்கும் ஏற்படும் திடீர் தசைப்பிடிப்புகளை போக்குவதற்கும் இம்முறைதான் பயன்படுகிறது.


வெளிநாடுகளில் பல நூற்றாண்டுகளாக இம்முறை பயன்படுத்தப்பட்டாலும், இங்கிலாந்தில்தான் ஐஸ் மூலம் அளிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளையும் நவீனப்படுத்தியுள்ளார்கள். இப்போது பிஸியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாகவே ‘ஐஸ் தெரபி’ உள்ளது. தாடை எலும்பில் ஏற்படும் வலி, விபத்துகளால் ஏற்படும் ரத்தக்கட்டு மற்றும் பல் வலியினால் உருவாகும் வீக்கத்தையும் ஐஸ்பேக் வைப்பதன் மூலம் குறைக்கலாம். அதுபோல், குதிகால்களில் வலி உள்ளவர்களுக்கு ‘கான்ட்ராஸ்ட் பாத்’ என்னும் சிகிச்சை செய்யப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றபிறகு ஏற்படும் கடுமையான அசதி மற்றும் உடல்வலியைப் போக்க ஐஸ் பாத் எடுக்கலாம். இந்த ஐஸ் தெரபி மூலம் தீராத முதுகுவலியையும் குணப்படுத்த முடியும். பாதங்களில் வலி ஏற்படுத்தும் பிரச்னையான ‘ப்ளான்டர் பேஸிடிஸ்’க்கும் ஐஸ் தெரபி உதவுகிறது.


நோய்க்கு ஏற்றபடி, வெவ்வேறு வடிவங்களில் ஐஸ் பேக்குகள் கிடைக்கின்றன. இதில் தண்ணீரை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எளிதாகப் பயன்படுத்தலாம். ரெடிமேடாக ஐஸ் ஜெல் பேக் கிடைக்கிறது. இதை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சார இணைப்போடு கிடைக்கும் ஜெல் பேக்கை ஹாட் பேடாகவும் பயன்படுத்தி வலி குறைப்புக்குப் பயன்படுத்தலாம். ‘ஐஸ் தெரபி சர்க்குலேட்டிங் சிஸ்டம்’ என்னும் கருவி இப்போது கிடைக்கிறது. இதில் உள்ள குடுவையில் ஐஸ் மற்றும் தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு இதில் இருந்து செல்லும் இணைப்பு குழாயின் மூலம் ஐஸ் தெரபியின் விளைவை கடத்தி உடலின் எந்த பாகத்துக்கும் எளிதாக சிகிச்சை அளிக்கலாம். சிகிச்சை அளிக்கும் பாகத்தில் ஸ்ட்ராப் பொருத்திக்கொள்ளவேண்டும். முதுகு, மூட்டு, தோள்பட்டை, கணுக்கால் போன்றவற்றில் வரும் வலிகளுக்கு இந்த உபகரணம் பயன்படுத்தப்படுகிறது.


முதுமையில் சருமம் மிகவும் வறண்டு காணப்படும் நபர்களுக்கு இந்த ஐஸ் தெரபியை செய்யக்கூடாது. சிலருக்கு, சருமத்தின் உணர்வுகள் சரியாக இருக்காது. அதிகமாக குளிர்ச்சி இருந்தால்கூட அவர்களால் உணர இயலாது. இதனால் ஐஸ் பர்ன் எனும் புண்கள் ஏற்படும். ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தாலும் ஐஸ் தெரபி கொடுக்கக்கூடாது. மேலும், பெரிதாக இருக்கும் திறந்த காயங்களில் இந்த தெரபியை பயன்படுத்தக் கூடாது. ‘ரேனாட்ஸ் பினொமெனன்’ என்ற அபூர்வ பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்த நாளங்கள் மிகச்சிறியதாக இருக்கும். இவர்களுக்கு ஐஸ் தெரபி கொடுத்தால் அந்த இடம் நீலமாகிவிடும். குறிப்பாக, மேற்சொன்ன எல்லா சிகிச்சைகளையும் குறிப்பிட்ட மருத்துவர் அல்லது பிஸியோதெரபிஸ்ட்டின் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.


விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற பிறகு ஏற்படும் கடுமையான அசதி மற்றும் உடல்வலியைப் போக்குவதறகாக, ஐஸ் பாத் எடுக்கிறார்கள். குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் ஐஸ் கட்டிகளைக் கொட்டி, அதனுள் படுத்துக்கொள்வார்கள். இதன்மூலம், தசைகளின் இறுக்கம் தளர்ந்து உடல் ரிலாக்ஸ் ஆகும். தவிர, உடல் வலியும் குறையும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பும் கிடைக்கும். இந்தச் சிகிச்சையை 15 நிமிடங்களுக்கு மேல் செய்யக்கூடாது. கண்டிப்பாக ஒரு பிஸியோதெரபிஸ்ட்டின் மேற்பார்வையில் இந்தச் சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress