October 22, 2024
திருமண வரம், வீடு மனை யோகம் அருளும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முருகன்

கோயம்புத்தூரில் இருந்து சிறுவானி செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் மனோன்மணி, பச்சைநாயகி. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டில், கரிகால சோழனால் கட்டப்பட்டது.

இக்கோவில் வெளிப்பிராகாரத்தில், முருகபெருமான் பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன், தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க முனிவர் தான் இந்த பால தண்டாயுத சுவாமியை பிரதிட்டைசெய்து, இங்கு கடும் தவம் புரிந்தார் என்கிறது தல புராணம். இத்தலத்து முருகன் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியிருக்கிறார்

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், முருகப்பெருமான் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அதே போல் இக்கோவிலிலும், பால தண்டாயுதபாணி மேற்கு பார்த்த நிலையில் தரிசனம் தந்தருள்கிறார். இப்படி மேற்குப் பார்த்தபடி முருகக் கடவுள் திருக்காட்சி தரும் திருத்தலங்கள் அரிது. மேலும் மேற்குப் பார்த்த நிலையில் உள்ள முருகக் கடவுளைத் தரிசிப்பது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

ஆடி கிருத்திகை, தை கிருத்திகை போல் மாதந்தோறும் வருகிற எல்லா கிருத்திகை நட்சத்திர நாளும் இங்கே விசேஷம் தான். இந்த நாளில், பேரூர் பால தண்டாயுதபாணிப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.

கிருத்திகை நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு, பேரூர் முருகப்பெருமானை தரிசித்தால், திருமண பாக்கியம் கைகூடும். அதேபோல், திருமணமான பெண்கள் கிருத்திகை நட்சத்திர நாளில் விரதம் மேற்கொண்டு பாலதண்டாயுதபாணியை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கிருத்திகை நட்சத்திர நாளில், பால தண்டாயுதபாணிக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறலாம். எதிர்ப்புகள் இல்லாமல் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress