October 23, 2024
குலசேகரப்பட்டினத்தில் அடுத்த 2 ஆண்டுகளில்எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்

இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி நாராயணன் அறிவிப்பு

குலசேகரப்பட்டினத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி நாராயணன் கூறினார்.
இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் திருவனந்தபுரம் வலியமலையில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மைய இயக்குனரும், முதன்மை விஞ்ஞானியுமான வி.நாராயணன் கூறியதாவது:

ராக்கெட்டுக்கு தேவையான திரவ நிலையில் உள்ள உந்து சக்தி கருவிகளை மேம்படுத்தும் பணிகளில், திருவனந்தபுரம்-வலியமலை, நெல்லை மகேந்திரகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் மூலம் நடந்து வருகிறது. திட மோட்டார் நிலை, திரவ எந்திரம் நிலை மற்றும் மேல்நிலை ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட். இதில் திட மற்றும் திரவ எந்திர நிலைகளை திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் தயாரித்து, சோதனை செய்து வருகிறது.


மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் திட்டத்திற்கு மனிதர்களை விண்ணுக்கு அழைத்து செல்வதற்காக பயன்படுத்தப்படும் 2 நிலைகளை தயாரித்து, கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு சோதனைகளை முடித்து அனைத்திலும் வெற்றி பெற்று உள்ளோம். அந்தப்பணி நிறைவடைந்து உள்ளது. தற்போது இந்த 2 நிலைகளும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அனுப்பி உள்ளோம். இதனை தொடர்ந்து, சுற்றுப்பாதை தொகுதிகள் என்று அழைக்கப்படும் ஆர்பிட்டல் மாடுல்யூஸ் தான் விண்வெளி வீரர்கள் அமர்ந்து இருப்பார்கள். இதனையும் சோதனை செய்துள்ளோம். இந்தப்பகுதி ராக்கெட்டின் மேல் பகுதியில் இருக்கும். இதனை ராக்கெட் 170 கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.


அதிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்வதற்கு ‘சர்வீஸ் மாடல் புரபல்சன் மாடுல்யூஸ்’ என்ற அமைப்பை தயாரித்துள்ளோம். வீரர்களை விண்ணுக்கு அழைத்து சென்று மீண்டும் பத்திரமாக அழைத்து வரும்போது வேகத்தை குறைப்பதற்கான எல்லா சோதனைகளையும் வெற்றிரகமாக முடித்து உள்ளோம். வீரர்கள் அமரும் பகுதியில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, வெப்பநிலை, ஈரப்பதம் அளவை கணக்கிடுவது போன்றவற்றுக்கான பணிகளில் 50 சதவீதம் வெற்றி கண்டு உள்ளோம்.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டும் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. 2-வது ஏவுதளம் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலங்களை தமிழ்நாடு அரசு ஒப்படைத்து உள்ளது. முறையாக ஏவுதளம் அமைப்பதற்கான அனுமதியை பெற்று பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


அடுத்த 2 ஆண்டுகளில் இந்தப்பணிகள் நிறைவடைந்து அங்கிருந்து சிறியவகை ராக்கெட்டுகள், அதாவது எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் ஏவப்படும். சிறியவகை ராக்கெட்டாக இருந்தாலும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மொத்த எடை 120 டன்னாகும். இதில் 500 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட செயற்கைகோள்களை இந்த ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியும். குலசேகரப்பட்டினத்தில் இருந்து துருவ பகுதிகளுக்கு செயற்கைகோளை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress