மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி
ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருவிழாவில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் பிரசித்திப்பெற்ற ஆலயமான இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாட்களில் தினமும் காலை 6.10 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், பகல் 11.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.
நேற்று அற்புதக் கெபி பெருவிழா நடந்தது. இதையொட்டி காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் அருட்தந்தை குமார்ராஜா முதல் திருப்பலி நடத்தினார். காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அருட்தந்தை ரூபஸ் தலைமையில் ஆங்கில திருப்பலி நடந்தது. பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்டம் முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் வாரவழிபாடு திருப்பலி நடந்தது.
மாலை 4.30 மணிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் திருயாத்திரை திருப்பலி நடந்தது. 6 மணிக்கு வீரபாண்டியன்பட்டினம் உதவி பங்குத்தந்தை டிமில் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடர்ந்து கொடியிறக்கம் நடந்தது.
விழாவில், அருட்தந்தைகள் அலாசியஸ், ராஜன், அமலன், பீட்டர்பால், பென்சிகர், ரோசன், ஜான்சன், பாலன், பாலன் பிரசாந்த், ஜார்ஜ், அருட்சகோதரர் சதீஸ், ஆலந்தலை ஊர்நல கமிட்டி தலைவர் ஆசைதம்பி, உதவி தலைவர் கேஜிஸ் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தை சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி, அருட்சகோதரிகள், ஊர் நலகமிட்டியினர், திருத்தல நிதிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.