October 22, 2024
குளிருக்கு சூடான உணவு!


குளிர்காலம் வந்தாலே நம்மில் பலருக்கும் எப்போதும் இருக்கும் இடத்தை சூடாகவோ, உணவுப் பொருளை தேடியோ மனம் செல்வது வழக்கம். காரணம் குளிர்காலத்தில் உடலில் வெப்ப உணர்வைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆனால் எக்காலத்திலும் எந்த நேரத்திலும் சரிவிகித உணவு சாப்பிடுவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குளிர் மற்றும் மழைக்காலங்கள் தொற்றுநோய்களுக்கான நேரம் என்பதால் இதனைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நாள் முழுவதும் சூரியனின் இயக்க நிலையை பொறுத்தே நமது செரிமான நிலையும் அமைவதாக ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது. அதாவது ஜீரோ மதிப்பீட்டில் இருந்து நமது உடலும் அதன் இயக்க நிலையை தொடங்குகிறது.

நாம் குளிர் காலத்தை சமாளிக்க சூடான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோமே தவிர அவை சரியாக செரிமானம் ஆகிறதா இல்லை வேறு ஏதும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை. நாம் சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும். அதேசமயம் இந்த காலத்தில் குளிர் உணவுகள் எப்படி உடலுக்கு கேடு விளைவிக்கிறதோ அதே அளவு காலை நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் சூடான உணவு பாதிப்பை உண்டாக்குகிறது என ஆயுர்வேத மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

காலை உணவு ஒரு நாளின் முதல் உணவு என்பதால் அதன் சூடான தன்மை செரிமான அமைப்பு வெப்பமடைய செய்கிறது. நாள் முழுவதும் உணவை ஜீரணிக்கக்கூடிய வகையில் நமது உடலை தயார்படுத்த காலை உணவை மென்மையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது மதிய உணவை ஜீரணிக்கும் வகையில் நமக்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தின்படி நண்பகல் 12 முதல் 2 மணிக்குள் மதிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியன் வானத்தில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரம் நமது செரிமான திறன் உகந்ததாக இருக்கும் என நம்பப்படுகிறது.

குளிர்ந்த காலை உணவை உட்கொள்வது என்பது எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றுவது போன்றதாகும். எனவே காலை உணவாக புதிதாக சமைத்த கஞ்சி, பழங்கள், வேகவைத்த பருப்பு வகைகள், வேகவைத்த காய்கறி சூப் போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். செரிமான நொதிகள் செயல்பட சூடான உணவுகள் தேவை என்பதால் ஏற்கனவே செய்த உணவுப் பொருளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான டீ, காபி, காரமான உணவுகள், புளிப்பான பழங்கள், இனிப்பு உணவுகள் தக்காளி, வாழைப்பழம், பேக்கரி வகைகள், குளிர்பானங்கள், முழு தானியம் ஆகியவை எந்த கால நிலையிலும் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதேபோல் எந்த உணவை எந்த உணவுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

இது குளிர்கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தது என்றாலும், குறிப்பாக குளிர்காலத்திற்கு ஏற்றது. முந்திரி, பிஸ்தா, பேரீச்சை, பாதாம் மற்றும் வால்நட் போன்றவற்றை அளவாக சாப்பிடும்போது, உடலின் வெப்பத்தை அதிகரித்து, குளிர்காலத்தின் சோர்வைப் போக்கி, உடலுக்கு எனர்ஜியைக் கொடுக்கும். குளிர்காலத்தில் அதிக தாகம் எடுக்காததால், நிறையப்பேர் தண்ணீர் குடிக்கவே மறந்துவிடுவார்கள். உடலின் எந்த இயக்கத்திற்கும் தண்ணீர் அவசியம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஜில்லென தண்ணீரைக் குடிக்காமல் வெதுவெதுப்பாகக் குடித்தால், சளி போன்ற பிரச்னைகள் வராது. மேலும் சூடான நீராகாரங்களும் செரிமான மண்டலத்தைத் தூண்டி, ஜீரண சக்தியை அதிகரிக்கும். தக்காளி, முள்ளங்கி போன்ற நீர்க்காய்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.குறிப்பாக கொரோனா காலத்தில், அதிக மூலிகை மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, மிளகாய், பட்டை மற்றும் கிராம்பு போன்ற அனைத்துமே செரிமான சக்தியை தூண்டக்கூடியவைதான். மேலும் இவை அதிக உப்பு எடுத்துக்கொள்வதைத் தடுக்கும். குளிர்காலத்தில் எந்த உணவையும் சரியாக எடுத்துக்கொண்டால் எல்லாம் இன்பமாக அமையும்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress