October 22, 2024
“தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது!”

சிவராஜ் சிங் செளகான்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட அணி பிரிவு கிளை கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், “தமிழ்நாடு என்ற புண்ணிய பூமிக்கு நான் வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காலையில் தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டேன். இந்த ஆலயம் நாட்டின் ஒற்றுமைக்கு வழிகாட்டக்கூடிய ஆலயமாகும்.

சிவராஜ் சிங் செளகான்
இந்த ஆலயம் வடக்கே உத்திரகாசி என்று அழைக்ககூடிய வாரணாசியை பறைசாற்றும் விதமாக உள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் ஆலயத்தை பாதுகாக்க வேண்டிய வேலைகளை ஏதும் செய்யவில்லை. ஆலயத்தால் கிடைக்கிற வருமானத்தை வைத்து ஆலய மேம்பாட்டிற்கோ, ஆலய தூய்மைபணிக்கோ அரசாங்கம் செலவு செய்ததாக தெரியவில்லை. முதலில், ஆலயங்களில் இருந்து அரசாங்கம் உடனடியாக வெளியேற வேண்டும். அதை விரைவாக செய்வது நல்லது. அப்போதுதான் அந்த ஆலயம் சிறப்பாக இருக்கும். சனாதன தர்மத்தை நிலை நிறுத்தக்கூடிய பார்வையில் தான் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அதை மதிக்கவில்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைச்சராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பேசுகிறார். டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்களோடு ஒப்பிட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

மக்கள் அனைவரும் சனாதன தர்ம அடிப்படையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் செய்யக்கூடிய அனைத்து சம்பிரதாயங்களும் சனாதனத்துக்குள்தான் இருக்கிறது. சனாதனத்தை எதிர்க்கக்கூடிய வகையில் பேசக்கூடிய அரசாங்கம்தான் வீழுமே தவிர, சனாதாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மேல் தமிழக மக்கள் அதிகப்படியான அன்பு வைத்துள்ளார்கள். பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் தமிழ்மொழியை உலகமொழியாக பேசி வருகிறார்.

வரவேற்பு
ஐக்கிய நாடு சபைக கூட்டங்களில் கூட தமிழ்மொழியைப் பற்றி பெருமையாக பேசிய நபர் நமது பிரதமர் நரேந்திர மோடி. காசி தமிழ் சங்கம் மூலமாகவும், அதேபோல் செளராஷ்டிரா தமிழ் சங்கம் மூலமாகவும் தமிழகத்துக்கும் காசிக்கும் உள்ள தொடர்பை பிரதமர் மோடி வலுப்படுத்தியிருக்கிறார்‌. புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள புதிய பாராளுமன்றத்தில் புராதன பெருமைமிக்க செங்கோலை நிறுவி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. ஸ்டாலின் அரசு வன்முறையை கையாளக்கூடிய அரசாகவும், ஊழல் செய்யக்கூடிய அரசாகவும்தான் உள்ளது.

தி.மு‌.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ‘தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான்,
ஊழல் குற்றச்சாட்டில் ஒரு மந்திரி ஜெயிலில் இருக்கிறார், மற்றொரு மந்திரி பெயிலில் உள்ளார்.
இன்னும் பல மந்திரிகளுக்கு பெயில் எடுக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு‌.க. அரசாங்கம் இன்று வீழக்கூடிய அரசாங்கமாக இருக்கிறது‌. மத்திய அரசு கொடுக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியினை, மாநில அரசு ஒதுக்கியதாக சொல்லி மார்தட்டிகொள்கிறார்கள். அந்த நிதியையும் அவர்கள் முறையாக கொடுத்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க. 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வதற்கான வாய்ப்புள்ளது.

வரவேற்பு
இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்னரே ஆங்காங்கே உடைந்து நிற்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என கூறிவிட்டார். ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸூக்கு சீட்டு கொடுக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டார்கள். தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டதாக தெரிகிறது.

இந்தியா கூட்டணி உடைந்த கூட்டணிதான், இனி அது ஒன்று சேருவதற்கு வாய்ப்பில்லை. அயோத்தியில், 500 ஆண்டு கனவு இன்று நனவாகி உள்ளது. நடந்து முடிந்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடுமுழுவதும் மக்கள் தீபாவளி போல் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழ்நாட்டிற்காக மோடி சேவை செய்கிறார், அதன் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். பாரதப் பிரதமரும், தமிழக பா.ஜ.க.வும் தமிழக மக்களுக்காக போராடி வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்” என்றார்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress