பழநிக்கு வரும் பக்தர்கள் சண்முகநதியில் நீராடி, பெரியாவுடையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஈசனை வழிபட வேண்டும்.
பிறகு ஊர் தெய்வமான பெரியநாயகி அம்மனை வணங்கி, மற்றொரு ஆதிகோவிலான திருஆவினன்குடி முருகனை வணங்கவேண்டும். பிறகு மலை அடிவாரம் சுற்றி, மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வதே சரியான முறை.
தை மாத அறுவடைக்குப் பிறகு தைப்பூச நாளன்று விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை முருகனுக்கு வழங்குவர். 400 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள், பழநி முருகனை தங்களுடைய மருமகனாக பாவிப்பர். அதனால் மருமகனுக்கு செய்யும் அத்தனை சடங்குகளையும் அன்று முழுக்கச் செய்வர். தைப்பூசம் பெருவிழாவின் 10 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி வைப்பார்கள். அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ முத்துக்குமார சுவாமி அந்தந்த சமூகத்தினரின் மண்டகப்படியில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் கண்டு தினம் ஒரு வாகனத்தில் ரதவீதி சுற்றுவார்.

  • தைப்பூசத்தில் முதல்நாள் (கொடியேற்றம்):- புதுச்சேரி சப்பரம்
  • 2ம் நாள்:- வெள்ளி ஆட்டுகிடா வாகனம்
  • 3 மற்றும் 4ம் நாள்:- வெள்ளி காமதேனு வாகனம்
  • 5ம் நாள்:- வெள்ளி யானை
  • 6ம் நாள் (திருக்கல்யாணம்):- வெள்ளி ரதம்
  • 7ம் நாள் (தைப்பூசம்):- தைப்பூசம் திருத்தேரோட்டம்
  • 8ம் நாள்:- தங்கக்குதிரை வாகனம்
  • 9ம் நாள்:- பெரிய தங்கமயில் வாகனம்
  • 10ம் நாள் (கொடியிறக்கம்):- தெப்பத்தேர்.

ஆரம்ப காலங்களில் தைப்பூசம் 10 நாள் விழா பழநி முருகன் கோயிலில் நடைபெறவில்லை. தைப்பூச விழாக்கள் எல்லாம் பழநி ஊர் கோயிலான ஶ்ரீ பெரிய நாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். தைப்பூச விழாவில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து ஶ்ரீமுத்துக்குமார சுவாமி எழுந்தருளி 10 நாள் உலா வருவார். முருகப்பெருமான் திருக்கல்யாணம் கூட பழநிக்குப் பதிலாக பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் யாரும் ஆதிகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலுக்குச் செல்வது கிடையாது.
பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, பால் காவடி, தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்தும் மண்ணியிட்டு படியேறி சுவாமியை தரிசனம் செய்ய வருவர். பாத யாத்திரையாக வருபவர்களில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரைக்குடி நகரத்தார் காவடி பெரும் சிறப்பு வாய்ந்தது. பழநி கோயில்
தைப்பூசம் நாளில் காலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சன்யாசி (ஆண்டி) அலங்காரத்தில் முருகன் காட்சி தருவார்.
8.00 மணிக்கு சிறு காலசந்தியில் பாலசுப்பிரமணியராகவும், 12.00 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்திலும், இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்திலும் காட்சி தருவார்.

மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள அமைந்துள்ளது பழநி. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பழம் வேண்டி நின்றதால், முருகன் நின்ற இடம் ‘பழம் நீ’ என அழைக்கப்படுகிறது. பழனம் என்றால் விளைச்சலைத் தருகின்ற நிலம் எனப்படும். நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் இவ்வூர் பழனி என்ற பெயர் உருவானது என்றும் கூறுவார். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று என்றும் சொல்வதுண்டு.
பழநி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என கயிலாயத்தில் இருந்ததாகவும் ஈசன், அவற்றை அகத்திய முனிவருக்குக் கொடுக்க, அவரும் அவற்றை பொதிகைக்குக் கொண்டு போக நினைத்து, இடும்பாசூரனுக்கு ஆணையிட்டார். அவற்றைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைத்து பழநி மலை உருவானதாக தலவரலாறு கூறுகிறது.

காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் எல்லா பக்தர்களுக்கும் சிறு வில்லை சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
பழநி முருகனை நினைத்தாலும் நேரே வணங்கினாலும் அவன் ஏழேழ் தலைமுறைக்கும் பாதுகாப்பான் என்பது நம்பிக்கை. பழநியில் நிலைத்திருக்கும் தண்டபாணி தெய்வம் எல்லோருக்கும் நலங்கள் அருளட்டும்! முருகா சரணம்!

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress