October 22, 2024
தமிழக வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி.

தலைநகர் காத்த ம.பொ.சி

ஜூன் 26 – ம.பொ.சி. பிறந்த நாள்

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், கப்பலோட்டிய தமிழனைப் பற்றியும் முதன்முதலில் வெளி உலகறிய வைத்தவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி).

வறுமையின் காரணமாக 3-ம் வகுப்பு வரைதான் படித்தார் ம.பொ.சி. 1927-ல் ‘தமிழ்நாடு ‘ நாளிதழில் அச்சு கோப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் அறியநேர்ந்த விடுதலைப் போராட்டம் பற்றிய செய்திகள் அவருக்குள் சுதந்திர வேள்வியை எழுப்பின. பலமுறை சிறை சென்றார். சிறையில் தமிழ் இலக்கியங்களைக் கற்று, தமிழ்ப் புலமையை மேம்படுத்திக் கொண்டார்.

சிலம்புச் செல்வர்

ம.பொ.சி, தான் எழுதிய ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் நூலை தன் நண்பர் அச்சகத்தில் எழுத்து எழுத்தாகக் கோர்த்து அச்சிட்டார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியும், வீரபாண்டிய கட்டபொம்மனும் ம.பொ.சி-யின் எழுத்து மூலமே தமிழ் சமூகத்துக்கு அறிமுகம் ஆனார்கள். 1962-ல் ம.பொ.சி எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.

சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ‘சிலம்புச் செல்வர்’ என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

தமிழரசுக் கழகம்

1946-ல் ‘தமிழரசுக் கழகம்’ என்ற இயக்கத்தை ம.பொ.சி தொடங்கினார்.

சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண்டும் என்று ஆந்திர மக்கள் கோரினார்கள். ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் எழுப்பிய இந்தக் குரலுக்கு, ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று வீர முழக்கம் எழுப்பியவர் ம.பொ.சி. ஒரு கட்டத்தில் சென்னையை பொது தலைநகரமாக ஆக்கலாம், அல்லது இரண்டாகப் பிரிக்கலாம் என்று கூட மத்திய அரசு நினைத்தது. சென்னை நகரின் மீது தமிழர்களுக்கு உள்ள உரிமையை வலியுறுத்தி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தந்திகள் அனுப்பும் இயக்கத்தை ம.பொ.சி நடத்தினார். இதன் தாக்கத்தால் மத்திய அரசின் முடிவினை மறுபரிசீலனை செய்வதாகவும் சாஸ்திரி உறுதி கூறினார்.

ம.பொ.சியின் கடும் போராட்டத்தை தாங்க முடியாமல் அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியே அவரை கைது பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இறுதியாக ம.பொ.சியின் எண்ணம் போல் சென்னை தமிழ்நாட்டின் தலைநகரானது.

மாநகராட்சி கொடி

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சியின் கொடி, ‘கடல், கப்பல், மூன்று சிங்கங்கள், இரண்டு மீன்கள்’ கொண்டதாக இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின் மாநகராட்சியின் கொடிச்சின்னம் மாற்றப்பட வேண்டிய அவசியம் வந்தது. இதற்கான குழுவில் இருந்த ம.பொ.சி தனது தமிழரசு கழகத்தின் கொடியில் இருந்த சேர, சோழ, பாண்டியரின் சின்னமான ‘வில், புலி, மீன்’ சின்னங்களை சென்னை மாநகராட்சி கொடியிலும் பொறிக்க பரிந்துரைத்தார். இன்றுவரை ம.பொ.சி பரிந்துரைத்த கொடியே சென்னை மாநகராட்சியின் கொடியாக திகழ்கிறது.

ம.பொ.சியின் தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளைவாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர் களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசு கழகக் செயற் குழுக் கூட்டத்தில் முதன்முதலில் ம.பொ.சி தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே.

இப்படி தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ம.பொ.சி தமிழக வரலாற்றுப் பக்கங்களில் அழிக்க முடியாத மாமனிதராக விளங்குகிறார்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress