Spread the love

ஒரு முறை யுதிஷ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ! பகவான் கிருஷ்ணரே, ஓ! முழுமுதற் கடவுளே, ஓ! ஜகத்தின் நாதரே, கிருஷ்ணரே, வியர்வையில் தோன்றுவன, விதைகளில் தோன்றுவன, முட்டைகளில் தோன்றுவன, கருவில் தோன்றுவன போன்ற நான்கு விதமான ஜீவராசிகளின் மூல காரணம் நீரே. அனைத்தையும் சிருஷ்டித்து, காத்து பிறகு அழிப்பவரும் நீரே. மாசி மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் வழிமுறையைப் பற்றியும் மற்றும் இந்த மங்களகரமான நாளில் வழிபடத்தக்க தெய்வத்தை பற்றியும் தயவு செய்து எனக்கு விவரமாக கூறுங்கள்.

பகவான் கிருஷ்ணர், கூறினார் ஓ! மன்னர்களில் சிறந்தோனே, யுதிஸ்ஸ்டிரா, மாசி மாத வளர்பிறையில் தோனறக்கூடிய ஏகாதசி ஜெயா ஏகாதசி என கொண்டாடப்படுகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் அனைத்து பாவ விளைவுகளும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பவர். எக்காரணத்திற்கும் பிசாசு உடலை ஏற்க வேண்டியதில்லை. முக்தி அளிப்பதலும், ஒருவரின் பாவ விளைவுகளை அழிப்பதிலும் இந்த ஏகாதசிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை. ஓ, சிங்கம் போன்ற மன்னா, நான் ஏற்கனவே பத்ம புராணத்தில் விளக்கியுள்ளபடி இந்த ஏகாதசியைப் பற்றி இப்பொழுது கேள்.

“ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனின் நந்தவனத்தில் ஆனந்த உல்லாசத்துடன் கொண்டாட்டம் நடந்தது. தேவலோகம் எங்கும் திருவிழா போல் உற்சாகமும், கொண்டாட்டமும் நிரம்பி வழிந்தது. கந்தர்வர்கள் கானம் பாட, அதற்கேற்ப, கந்தர்வ கன்னிகள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். அதன் இடையே புஷ்பவதி என்னும் பெயர் கொண்ட கந்தர்வ கன்னி, மால்யவான் என்னும் பெயர் கொண்ட கந்தர்வனைக் கண்டு மயங்கி அவனை தன் செய்கை மற்றும் நடத்தையால் கவர்ந்து ஈர்க்க முயற்சித்தாள்.

மால்யவானும் அவள் மீது காதல்வசப்பட்டு தன் கானத்தின் சுருதியையும் தாளத்தையும் மறந்தான். இதனால் சங்கீதத்தில் லயம் கெட, கானத்தின் ஆனந்தம் கெட்டது. சபையில் இருந்த தேவர்கள் அனைவருக்கும் இது மிகவும் கெட்டதாகப் பட்டது. இச்செயல் தேவேந்திரனுக்கு மிகவும் கோபத்தை அளித்தது. சங்கீதம் ஒரு புனிதமான சாதனையாகும். அதன்புனிதத்தை கெடுப்பது தண்டனைக்குரியது. அதனால் கோபம் அடைந்த தேவேந்திரன் ஆத்திரத்தில் கந்தர்வ கன்னி புஷ்பவதி மற்றும் கந்தர்வன் மால்யவான் இருவருக்கும் சாபம் இட்டான்.
“நீங்கள் இருவரும் சங்கீத வித்யையின் புனிதத்தை மதிக்காமல் அவ‌மானம் செய்தது, தேவி சரஸ்வதியை அவமானம் செய்தது போலாகும். ஆகையால் நீங்கள் தேவலோகத்தை விட்டு பூலோகம் செல்வீர்களாக‌.

கற்றறிந்த பெரியோர் அடங்கிய தேவசபையில் பணிவு, அடக்கம், நாணம் இல்லா உங்கள் நடத்தையால் நீங்கள் சான்றோர்களுக்கும் அவமரியாதை செய்துள்ளீர்கள். ஆகையால் தேவலோகம் விட்டு பூலோகம் சென்று சபிக்கப்பட்ட பிசாசு ரூபத்தில் வாழ்க்கையைக் கழிப்பீர்களாக‌” என்று சாபமிட்டான்.  இந்திரனின் அளித்த சாபத்தை கேட்டு இருவரும் மிகவும் துக்கத்தால் வருந்தினர்.

பின்னர் ஹிமாலயத்தின் அடிவாரத்தில் பிசாசு ரூபத்தில் வாழ்க்கையை துக்கத்துடனும், வேதனையுடனும் கழிக்க ஆரம்பித்தனர். அவர்கள் நுகர்தல், உணர்தல், தொடுதல் என எவற்றைப் பற்றியும் அறியாமல் இருந்தனர். அதனால் தாளாத துக்கத்தையும் சகித்துக் கொண்டு இருந்தனர். இரவு, பகல் என்று எந்நேரமும் நித்திரை இல்லாமல் அவதிப் பட்டனர். ஹிமாலயத்தின் கடும் குளிரால் ரோமங்கள் நின்று கொள்ள, கை, கால்கள் விறைத்துக் கொள்ள, பற்கள் கிடுகிடுக்க மிகவும் அவதியுற்றனர்.

ஒரு நாள் பிசாச ரூபத்தில் இருந்த மால்யவான், புஷ்பவதியிடம், ” நாம் போன ஜன்மத்தில் என்ன பாபம் செய்தோமோ தெரியவில்லை இப்படி துக்கம் நிறைந்த பிசாசு வாழ்க்கை கிட்டி உள்ளது. இத்தகைய துக்ககரமான பிசாசு வாழ்க்கையை விட நரகத்தின் வேதனையை அனுபவப்ப்பது மேலானது.” என்றான். இப்படியாக அநேக சிந்தனைகளால் அலைக்கழிக்கப்பட்டு ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தனர் இருவரும். தெய்வாதீனமாக, ஒரு முறை மாசி மாதத்தின் சுக்லபட்சத்தில் வரும் ஜெயா ஏகாதசி நாளன்று இருவரும் அன்னம் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்தனர். பாபம் புரியாது பகவானிடம் மனமுருகி பிரார்த்தனையில் இருந்தனர். பகவானின் ஆராதனையின் பிரசாதமாக அளிக்கப்பட்ட கனிகளை மட்டும் உண்டு சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் மிகவும் அயர்ந்து துக்கத்துடன் அரசமரத்தின் கீழ் அமர்ந்தனர். அன்றைய இரவை இருவரும் மிகவும் கஷ்டத்துடன் கழித்தனர்.

மறுநாள் விடிந்த பொழுதில் பகவத் கிருபையின் பிரபாவத்தால் இருவரின் பிசாசு ரூபம் விலகி அழகிய அப்ஸர மற்றும் கந்தர்வ தேகத்தை அடைந்தனர்.

அழகிய ஆடை மற்றும் அணிமணிகள் தேகத்தை அலங்கரிக்க, ஸ்வர்க்க லோகத்தை நோக்கிப் பயணித்தனர். அச்சமயம் ஆகாயத்தில் தேவ கணங்களும், கந்தர்வர்களும் அவர்களின் புகழ் பாடினர். இருவரும் தேவ‌லோகம் சென்று தேவேந்திரனுக்கு தங்களுடைய வணக்கத்தை தெரிவித்தனர். தேவேந்திரன் அவர்கள் இருவரையும் அழகான, அலங்கரிக்கப்பட்ட ரூபத்தில் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்தான். அவர்களிடம், நீங்கள் பிசாசு ரூபத்திலிருந்து எவ்விதம் முக்தி பெற்றீர்கள் என்பதை விஸ்தாரமாகச் சொல்லுங்கள்” என்றான்.

அதற்கு மால்யவான், “ஹே தேவேந்திரா !, பகவான் விஷ்ணுவின் அருட்பிரபாவத்தாலும் மற்றும் ஜெயா ஏகாதசி விரதத்தின் புண்ணியத்தாலும் எங்களுடைய பசாசு ரூபம் விலகியது” என்றான்.

இந்திரன் மால்யவானிடம்,” ஹே மால்யவான்! , ஏகாதசி விரதத்தினாலும் பகவான் விஷ்ணுவின் அருட்கடாக்ஷத்தாலும் நீங்கள் இருவரும் பிசாசு தேகத்திலிருந்து விடுதலை அடைந்து பவித்ரமடைந்தீர்கள். அதனால் நீங்கள் இருவரும் எங்களுடைய வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியவர் ஆகிறீர்கள் ஏனென்றால் சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் பக்தர்கள் தேவர்களின் வணக்கத்துக்கு உரியவர் ஆகிறார்கள். அதன் படி நீங்கள் இருவரும் மிகுந்த புண்ய‌சாலிகள் என்றார்.

“ஹே குந்திபுத்ரா!, ஜெயா ஏகாதசி விரதத்தை கடைபபடிப்பதால் பூத, பிரேத, பிசாச ரூபத்திலிருந்து முக்தி கிடைக்கிறது. எவர் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கிறாரோ, அவர்அனைத்து தவம், யக்ஞம், தானம் ஆகியவற்றைச் செய்த பலனை அடைகிறார். எவர் ஒருவர் பக்தி பூர்வத்துடன் ஜெயா ஏகாதசி/பைமி ஏகாதசி விரதத்தைக் கடை பிடிக்கிறாரோ, அவர் ஆயிரம் ஆண்டு காலம் ஸ்வர்க்கத்தில் வசிக்கும் பாக்கியம் பெறுவர்” என்றுரைத்தார்
ஸ்ரீ கிருஷ்ணர்.

ஹரே கிருஷ்ண ஹரே
கிருஷ்ண, கிருஷ்ண
கிருஷ்ண ஹ‌ரே ஹரே
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress