October 22, 2024
ஏற்றம் தரும் ஏகாதசி


எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்போர் ஆன்மிகவாதிகள். அதனால்தான் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.


இந்த ஏற்றம் தரும் ஏகாதசி விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. ‘ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி’ என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.


பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ”உனக்காக நாங்கள் காத்திருக்க… நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே…” என்று ஏளனம் செய்தார்களாம். அவர்களிடம், ”இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு… சுத்தம் பாகவதஸ்யான்னம்!” என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.


அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.


மேலும், திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார்.

மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்துவிட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress