October 23, 2024
குழந்தை வரம் தரும்  கிருஷ்ண ஜெயந்தி

2024ம் ஆண்டிற்கான கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திங்கட்கிழமையில் வருகிறது. வழக்கமாக ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளை தான் கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுவது உண்டு. கிருஷ்ணரின் அருளை பெறுவதற்காக இந்த நாளில் அனைவரும் தங்களின் வீடுகளில் கிருஷ்ணர் எழுந்தருள்வதாக பாவித்து, பூஜை செய்து வழிபடுவார்கள்.


இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யும் தெய்வ வழிபாட்டினால் கிருஷ்ணரின் அருள் மட்டுமல்ல பல தெய்வங்களின் அருள் கிடைக்கும். இதனால் எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் விலகும். உங்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி விரதம் என்பது குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அருளும் திருநாளாகும். இந்த நாளில் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வீட்டில் சந்தான கிருஷ்ண ஹோமம் நடத்தினால் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் கண்ணனே வந்து குழந்தையாக பிறப்பான் என்பது ஐதீகம்.

குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி, இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. ஆகஸ்ட் 26ம் தேதி இரவு 9 மணிக்கு பிறகு தான் ரோகிணி நட்சத்திரம் துவங்குகிறது. கிருத்திகை, முருகப் பெருமானுக்குரிய விரத நாளாகும். கிருத்திகை, சஷ்டி இரண்டுமே குழந்தை வரம் வேண்டுபவர்கள் கடைபிடிக்கும் விரதம் ஆகும். அதனால் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் கிருஷ்ணரின் அருள் மற்றும் முருகப் பெருமானின் அருளால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த நாளுக்கு இருக்கும் மற்றொரு சிறப்பு என்னவென்றால், தேய்பிறை அஷ்டமி. இது காக்கும் தெய்வமான கால பைரவருக்கு உரிய வழிபாட்டு நாளாகும். தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் துன்பம், கடன், தடை, எதிரிகள் தொல்லை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். அதோடு இது சிவபெருமானை வழிபடுவதற்குரிய திங்கட்கிழமையில் வருகிறது. சிவ பெருமான், தீமைகள் மற்றும் பாவங்களை அழித்து, இன்பங்களை வழங்கக் கூடிய கடவுள்.


அதனால் இந்த ஆண்டு வரும் கிருஷ்ண ஜெயந்தி தவற விடக்கூடாத அற்புதமான நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் வழிபட்டால் கிருஷ்ணர், முருகன், பைரவர், சிவன் ஆகிய தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும். பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி வழிபாடு, பிரச்சனைகளை தேய்ந்து போக வைக்கக் கூடியது என சொல்வார்கள். அதிலும் இந்த ஆண்டு பல தெய்வங்களின் அருளை பெறுவதற்குரிய நாளும் ஒரே நாளில் ஒன்ற கூடி அமைந்துள்ளது. இது போல் அமைந்து வருவது மிகவும் அபூர்வமானதாகும்.

  • மோகன பிரியா

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress