October 23, 2024
இறக்கத்தான் பிறந்தோம்; அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’

`இறக்கத்தான் பிறந்தோம்; அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’ – இது அன்னை தெரசாவின் அர்த்தமுள்ள வரிகள். இன்று அன்னை தெரசாவின் பிறந்தநாள். அல்பேனிய நாட்டைச் சேர்ந்த இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா.

இளம் வயதில் கிறிஸ்தவ மறைபணியாளர்களாலும், அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்ட இவர் தனது 12ஆவது வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 18 ஆவது வயதில் முழு நேர சேவையில் ஈடுபட நினைத்தார். அதன்படி Sodality of children of Mary அமைப்பைச் சேர்ந்த லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறை பணியாளராக சேர்ந்தார். ஆனாலும் முழு நேர சேவகராக மாறுவதற்காக அயர்லாந்தின் சிஸ்டர்ஸ் ஆஃப் லொரேட்டோ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா என்பவர் ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்காக சேவை செய்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். தொடர்ந்து சேவையாற்ற நினைத்த அவர் தனது 24ஆவது வயதில் மரணம் அடைந்தார். எனவே அவரது நினைவாக தனது பெயரை தெரசா என மாற்றிக் கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டவர் அன்னை தெரசா.

பசியால் வாடுவோர், வீடிழந்து தவிப்போர், மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என பலருக்கும் உதவி செய்த இவர் தேசம் கடந்து தனது பணியை செய்யத்தொடங்கினார். அடுத்துவந்த நாட்களில் `மிஷினரிஸ் ஆப் சாரிட்டிஸ்’ என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

`காந்தி பிரேம் நிவாஸ்’ என்ற பெயரில் நிரந்தரத் தொற்று நோய் மருத்துவமனையை அமைத்து அதன்மூலம் பல்வேறு பணிகளைச் செய்து வந்தார் அன்னை தெரசா. நம் கண்முன் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வாழ்ந்து மறைந்த அவர் இன்றைக்கு புனிதர் நிலைக்கு உயர்ந்திருக்கிறார். உலக வரலாற்றில் மனிதாபிமானிகள் பலர் உள்ளனர். அவர்கள் மத்தியில் அன்னை தெரசாவின் செயல்கள் போற்றுதலுக்குரியவை. ஈடு இணையற்ற அவரது செயல்கள் இன்றைக்கும்கூட அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress