October 22, 2024
ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள்  தடையின்றி வெற்றிபெறும்

சூரிய ஒளி இல்லாவிடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். அந்தவகையில், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ பாவ காரியங்கள் செய்துவிடுகிறோம். அதன் பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமே ரத சப்தமி விரதமாகும். தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாள் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி திதி என கொண்டாடப்படுகின்றது. இது, வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. காலபுருஷ கணிதத்தின்படி சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்தைநோக்கிப் பயணிக்கிறார். சூரியன் தனது ரதத்தை வடதிசை நோக்கிச் செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்தான் ரத சப்தமி. இந்த நாள், மிக சிறப்பாகக் கொண்டாட வேண்டிய விரத நாள். இந்த நாள் சூரிய ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன். அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள். யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட்டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர். பிரம்மதேவர், இந்திரன் முதலானோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான். சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’. அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார். உண்மையிலேயே சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தைத் தொடங்குவது இந்த நாளில் தான்.


ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கை, தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்கிறது ஐதீகம். கணவரை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது.


இப்படிக் குளித்தபின் வீட்டுப் பூஜை அறையில் தேர்க்கோலமிட்டு அலங்கரித்து, சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து விநியோகிக்க, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். ஆதித்ய ஹிருதயம் பாடி சூரியனை வழிபடுவது சிறப்புடையது. சூரிய பகவானை நாராயணனின் அம்சம் என்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். மேலும், ரத சப்தமி நன்னாளில் துவங்குகிற தொழில் மற்றும் பணிகள் எதுவாயினும் தடையின்றி நடந்தேறும். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்த்து, நம் பாவங்களையெல்லாம் போக்கும் என விவரிக்கின்றன ஞான நூல்கள். முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார் என ஐதீகம். இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்தும் என்கின்றன.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress