October 22, 2024
குளிர்கால நோய்களை விரட்ட சில வழிகள்

குளிர்காலம் என்பது நோய்களுக்கான காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலத்தில் சில நோய்கள் பரவுகின்றன. ஆகையால், அத்தகைய சமயத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, பெற்றோர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தைகளை எப்போதும் கூடுதல் கவனம் செலுத்தி கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதிலும் இந்த கொரோனா மற்றும் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதிக குளிர் மற்றும் தூசு காரணமாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்குகிறது. எவ்வளவுதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும் குழந்தைகள் மிக எளிதில் இது போன்ற பருவ காலங்களில் நோய்வாய்ப்படுகிறார்கள்.

எனவே அவர்களது உணவுப் பழக்கத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது. சில குறிப்பிட்ட உணவுகள் குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ உதவுகிறது. நாம் குளிர் காலத்தை சமாளிக்க சூடான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறோமே தவிர, அவை சரியாக செரிமானம் ஆகிறதா இல்லை வேறு ஏதும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை. நாம் சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும். நாள் முழுவதும் உணவை ஜீரணிக்கக்கூடிய வகையில் நமது உடலை தயார்படுத்த காலை உணவை மென்மையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது மதிய உணவை ஜீரணிக்கும் வகையில் நமக்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது.

எனவே காலை உணவாக புதிதாக சமைத்த கஞ்சி, பழங்கள், வேகவைத்த பருப்பு வகைகள், வேகவைத்த காய்கறி சூப் போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான டீ, காபி, காரமான உணவுகள், புளிப்பான பழங்கள், இனிப்பு உணவுகள் தக்காளி, வாழைப்பழம், பேக்கரி வகைகள், குளிர்பானங்கள், முழு தானியம் ஆகியவை எந்த கால நிலையிலும் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.


அதேபோல் எந்த உணவை எந்த உணவுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் மசாலா மற்றும் மூலிகைப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். இது குளிர்கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். உலர் பழங்கள் மற்றும் உலர் கொட்டைகள் எல்லா காலத்திலும் சிறந்தது என்றாலும், குறிப்பாக குளிர்காலத்திற்கு ஏற்றது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.


மேலும், குளிர்காலத்தில் உடலுக்கு சக்தியையும் சுறுசுறுப்பையும் தருவது உடற்பயிற்சிதான். இந்த மந்தமான குளிரில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்து வருவதால் இக்காலத்திலும் நமது உடல் இதமாக இருக்கும். உடற்பயிற்சியானது உடலின் பாகங்கள் நன்றாக வேலை செய்யவும், உடல் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றது. உடலில் ஒரு புத்துணர்வு வந்து அந்த நாளின் வேளைக்கு நம்மை தயார் செய்யும்வண்ணம் இப்பயிற்சிகள் விளங்குகின்றன. உடற்பயிற்சிக்காக வெளியே செல்ல விரும்பாதவர்கள் வீட்டை க்ளீன் செய்வது, துணி துவைப்பது, கார்டனிங் வேலை உள்ளிட்ட வீட்டுவேலைகளில் தங்களை அதிகமாக ஈடுபடுத்திக்கொள்ளலாம். ஏனென்றால், வீட்டு வேலைகளை செய்வதுகூட கணிசமான அளவு கலோரிகளை எரிக்க உதவும். மேற்கண்டவற்றை முறையாக எல்லோரும் கடைப்பிடித்து வந்தால், எல்லோரும் குளிரிலிருந்து விடுபடலாம். கொள்ளை நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress